கம்யூனிஸ்ட்டை அறிமுகம் செய்வது
(1939, அக்டோபர் 4)
மாவோ
பதிப்பாளர் குறிப்பு :
"'கம்யூனிஸ்ட்'டை அறிமுகம் செய்வது" என்ற கட்டுரை பீக்கிங் மக்கள் பதிப்பகத்தினரால் பிரசுரிக்கப்பட்ட "தேர்ந்தெடுக்கப்பட்ட மாசேதுங் படைப்புகள்" வால்யும் 2-லே (1952, ஆகஸ்ட், முதலாவது பதிப்பின்படி 1968, டிசம்பரில் பதிப்பிக்கப்பட்டது) கண்டுள்ள சீன வாசகத்திலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. அயல் மொழிகளிலே தனிக் கட்டுரையாக வெளியிடும் தேவையையொட்டி, இக்கட்டுரையிலுள்ள குறிப்புகள் மாற்றப்பட்டுள்ளன.
தோழர் மாசேதுங் அவர்களின், " 'கம்யூனிஸ்ட்'டை அறிமுகம் செய்வது" என்ற இக்கட்டுரை 1939, அக்டோபர் 4ந் தேதி எழுதப்பட்டது.
- சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாசேதுங் படைப்புகளைப் பிரசுரிப்பதற்கான கமிட்டி.
மத்திய கமிட்டி உட்கட்சிப் பத்திரிக்கையொன்றைப் பிரசுரிப்பதற்கு நீண்ட காலமாகத் திட்டமிட்டிருந்தது. கடைசியில், தற்போது அந்தத் திட்டம் உண்மையாக்கப்பட்டுவிட்டது. தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ’வியமயமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைப்பதற்கு இப்படிப்பட்ட பிரசுரம் ஒன்று அவசியம். தற்போதைய நிலைமையில் இந்தத் தேவை மேலும் தெளிவாகத் தெரியக் கூடியதாயுள்ளது. தற்போதைய நிலைமையின் விசேஷ அம்சங்கள் பின்வருமாறு:
ஒருபுறம், ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக்குள் சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்கள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றது. மறுபுறம், எமது கட்சி தனது குறுகிய எல்லைகளைத் தாண்டி, தேசிய அளவிலான பிரதான கட்சியாகின்றது சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களை வெற்றிக்கொள்ளவும் எதிர்பாராதபடி நிகழக்கூடிய சம்பவங்கள் அனைத்தையும் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்யவும் பொதுமக்களை அணிதிரட்டுவதே கட்சியின் கடமையாகும். இதனால், எதிர்பாராதபடி நிகழக்கூடிய சம்பவங்கள் நிகழ்ந்தாலும் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. இது போன்றதொரு சமயத்தில் ஒரு உட்கட்சிப் பத்திரிகை வெளியிடுவது உண்மையிலேயே மிக அவசியமானது.
இந்த உட்கட்சிப் பத்திரிக்கை "கம்யூனிஸ்ட்" என்றழைக்கப்படுகின்றது. அதன் கடமை என்ன? அது என்ன அம்சத்தைக் கொண்டிருக்கும்? அது ஏனைய கட்சிப் பிரசுரங்களினின்றும் எவ்வகையில் வேறுபட்டதாயிருக்கும்?
தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ’வியமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்க உதவுவதே அதன் கடமையாகும். இப்படிபட்ட கட்சி ஒன்றைக் கட்டியமைப்பது சீனப் புரட்சியின் வெற்றிக்கு மிக அவசியம். பொதுவாக, அதற்குரிய அகநிலை நிலைமைகளும் புறநிலை நிலைமைகளும் இப்போதுள்ளன. இந்த மகத்தான திட்டம் உண்மையில் இப்பொழுது முன்னேற்றமடைகிறது. சாதாரண கட்சிப் பிரசுரம் ஒன்றின் ஆற்றலுக்கப்பாற்பட்ட இந்த மகத்தான திட்டத்தை நிறைவேற்றுவதில் உதவுவதற்கு விசேஷக் கட்சி வெளியீடொன்று அவசியம். ஆகவேதான், இப்பொழுது "கம்யூனிஸ்ட்" வெளியிடப்படுகின்றது.
எமது கட்சி ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட அளவிற்குத் தேசிய அளவிலானதாகவும் வெகுஜன இயல்புடையதாகவுமிருக்கின்றது. அதன் தலைமை மையத்தையும் அதன் அங்கத்தவரில் ஒரு குறிப்பிட்ட பகுதியையும் அதன் பொது மார்க்கத்தையும் புரட்சி வேலையையும் பொறுத்தவரை அது ஏற்கனவே சித்தாந்தரீதியிலும் அரசியல்ரீதியிலும், ஸ்தாபனரீதியிலும் ஸ்திரப்படுத்தப்பட்டதும் போல்ஷ்விய மயமானதுமான ஒரு கட்சியாக இருக்கின்றது.
அப்படியானால் இப்போது ஒரு புதுக்கடமையை முன்வைப்பது ஏன்?
காரணம் என்னவென்றால், எமக்குத் தற்போது பல புதிய கிளைகள் உள்ளன; அவை பெருந்தொகையான புதிய அங்கத்தினர்களைக் கொண்டுள்ளன; அவை இன்னும் வெகுஜன இயல்புடையனவாகவோ சித்தாந்தரீதியிலும், அரசியல்ரீதியிலும், ஸ்தாபன ரீதியிலும் ஸ்திரப்படுத்தப் பட்டனவாகவோ அன்றி போல்ஷ்விய மயமானவையாகவோ கருதப்படக் கூடியனவாய் இல்லை. அதே வேளையில், பழைய கட்சி அங்கத்தினர்களின் அரசியலறிவின் மட்டத்தை உயர்த்துவது, பழைய கட்சிக் கிளைகளைச் சித்தாந்தரீதியிலும், அரசியல் ரீதியிலும், ஸ்தாபனரீதியிலும் மேலும் ஸ்திரப்படுத்துவது, அவற்றை மேலும் போல்ஷ’வியமயமாக்குவது என்ற பிரச்சினையும் இருக்கின்றது. கட்சி எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் கட்சி தோள்கொடுக்கும் பொறுப்புக்களும் புரட்சிகர உள்நாட்டு யுத்த காலத்தில் இருந்தவற்றைக் காட்டிலும் பெருமளவில் வேறுபட்டனவாயுள்ளன; தற்போதைய சூழ்நிலைகள் முன்பைவிட மிகக்கூடிய அளவு குழப்பமுடையனவாயும் பொறுப்புக்கள் மிகவும் சுமையானவையாயும் உள்ளன.
இது தேசிய ஐக்கிய முன்னணிக் காலம், நாம் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருக்கின்றோம்; இது ஜப்பானிய - எதிர்ப்பு யுத்த காலம், எமது கட்சியின் ஆயுதந்தாங்கிய சக்திகள் போர்முனையில் நேசப் படைகளுடன் சேர்ந்து எதிரிகளுடன் ஈவிரக்கமற்ற போரில் ஈடுபடுகின்றன. எமது கட்சி தேசிய அளவிலானதொரு பிரதான கட்சியாகிய காலம் இதுதான். அப்படியாகியதால், எமது கட்சி இனிமேலும் முன்பிருந்தது போலிருக்காது. இவ்வம்சங்களெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துப் பார்ப்போமானால், நாமாகவே முன்வைத்த கடமை, அதாவது, "தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ்வியமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினைக் கட்டியமைக்கும்" கடமை எவ்வளவு மேன்மையானதும் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும் என்பதை நாம் புரிந்து கொள்வோம்.
இவ்வகையான கட்சியொன்றை அமைப்பதற்கே இப்பொழுது நாம் விரும்புகின்றோம். ஆனால், அதற்கு எப்படி வேலைசெய்யத் தொடங்கவேண்டும்? எமது கட்சியின் வரலாற்றையும் அதன் பதினெட்டாண்டு காலப் போராட்டச் சரித்திரத்தையும் ஆராயாது இந்தக் கேள்விக்கு எம்மால் விடைகூறமுடியாது.
1921ல் நடந்த எமது முதலாவது தேசிய மாநாடு முதல் இன்றுவரை எமது கட்சியின் வரலாற்றுக்காலம் முற்றாகப் பதினெட்டு ஆண்டுகளாகிவிட்டது. இந்தப் பதினெட்டு ஆண்டுகளில் எமது கட்சி பல மகத்தான போராட்டங்களுக்கூடாகச் சென்றிருக்கிறது. கட்சியின் அங்கத்தவர்களும் அதன் ஊழியர்களும் ஸ்தாபனங்களும் இந்த மகத்தான போரட்டங்களில் புடம்போட்டு எடுக்கப்பட்டள்ளனர். அவர்கள் புரட்சியில் மகத்தான வெற்றிகளையும் பாரதூரமான தோல்விகளையும் அனுபவித்தனர். இந்தக் கட்சி முதலாளித்துவ வர்க்கத்துடன் ஒரு தேசிய ஜக்கிய முன்னணியை நிறுவியது. பின்னர் இந்தத் தேசிய ஐக்கிய முன்னணி தகர்ந்ததனால் பெரும் முதலாளித்துவ வர்க்கதுடனும் அதன் கூட்டாளிகளுடனும் ஒரு கசப்பான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. கடந்த மூன்றாண்டுகாலத்தில், அது முதலாளித்துவ வர்க்கத்துடன் அமைக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணிக் காலத்திற்குள் திரும்பவும் பிரவேசித்திருக்கின்றது. சீன முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள இவ்வகையான சிக்கலான தொடர்பு மூலந்தான் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும் தம் வளர்ச்சியில் முன்னேற்றம் அடைந்திருக்கின்றன. இது ஒரு விசேஷ சரித்திர அம்சம், காலனித்துவ, அரைக்காலனித்துவ நாடுகளிலுள்ள புரட்சிக்குச் சிறப்பான, எந்த முதலாளித்துவ நாட்டு புரட்சிச் சரித்திரத்திலும் காணமுடியாததோர் விசேஷ சரித்திர அம்சம். மேலும், சீனா ஒரு அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரபுத்துவ நாடாக இருப்பதனாலும் அதன் அரசியல், பொருளாதார, கலாச்சார வளர்ச்சிகள் சமமானதாக இல்லாததானாலும் அதன் பொருளாதாரம் பிரதானமாக அரை நிலப்பிரபுத்துவமாகவும் அதன் பரப்பு விஸ்தீரணமானதாகவும் இருப்பதனாலும் இந்தக் கட்டத்தில், சீனப் புரட்சி இயல்பில் முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியாக உள்ளது, அதன் பிரதான இலக்குகள் ஏகாதிபத்தியமும் நிலப்பிரபுத்துவமுமாகவும் அதன் அடிப்படை உந்து சக்திகள் பாட்டாளிவர்க்கமும் விவசாயிகளும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கமுமாகவும் உள்ளன. இதில் தேசிய முதலாளித்துவ வர்க்கமும் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவு பங்கெடுக்கும்.
அத்துடன் சீனப் புரட்சியின் பிரதான போராட்ட வடிவம் ஆயுதப் போராட்டமாகவும் இருக்கின்றது. உண்மையில், எமது கட்சிச் சரித்திரம் ஆயுதப் போராட்டச் சரித்திரம் என்று கூறப்படலாம். "சீனாவில் ஆயுதந்தாங்கிய புரட்சி ஆயுதந்தாங்கிய எதிர்ப்புரட்சியுடன் போரிடுகின்றது. அது சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்களிலொன்றாகவும் அதன் மேம்பாடுகளிலொன்றாகவும் இருக்கின்றது," எனத் தோழர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது முற்றிலும் உண்மையானது. அரைக்காலனித்துவச் சீனாவிற்கே சிறப்பாக உரிய இந்த அம்சம் முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளால் தலைமை தாங்கப்பட்ட புரட்சிகளின் சரித்திரத்தில் காணப்படவேயில்லை; அல்லது அது அந்த நாடுகளில் இருப்பவற்றிலிருந்து வேறுபட்டதாயுள்ளது. ஆகவே, சீன முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியில் இரண்டு விசேஷ அடிப்படை அம்சங்கள் உள்ளன:
1). பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்துடன் சேர்ந்து புரட்சிகரத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றை நிறுவுகின்றது, அல்லது அதைத் தகர்க்க நிர்பந்திக்கப்படுகின்றது.
2). ஆயுதப் போராட்டம் புரட்சியின் பிரதான வடிவமாயிருக்கின்றது.
எமது கட்சிக்கு விவசாயிகளுடனும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்துடனும் உள்ள உறவுகளை அடிப்படையான சிறப்பு அம்சமாக இங்கு நாம் குறிப்பிடவில்லை. ஏனென்றால் முதலாவதாக, இந்த உறவுகள் கோட்பாட்டு ரீதியில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை எதிர்நோக்கியவை போன்றதே. இரண்டாவதாக, சீனாவிலுள்ள ஆயுதப் போராட்டத்தைப் பற்றிச் சொல்லப் போனால் அது சாராம்சத்தில் விவசாயி யுத்தமாக இருக்கிறது; கட்சிக்கும் விவசாயிகளுக்கும் இடையிலுள்ள உறவுகளைப் பற்றிக் கூறின், அவை கட்சிக்கும் விவசாயி யுத்தத்திற்கும் இடையிலுள்ள நெருங்கிய உறவுகளாக இருக்கின்றன.
இந்த இரண்டு சிறப்பு அடிப்படை அம்சங்களின் காரணமாகவே, உண்மையில் அவற்றின் காரணமாகவேதான் எமது கட்சியின் அமைப்பு போல்ஷ்விய மயமாக்கப்பட்ட வர்க்கமும் சிறப்பான சூழ்நிலைகளில் முன்னேறுகின்றன. கட்சியின் தோல்விகள் அல்லது வெற்றிகள், அதன் பின்னடைவுகள் அல்லது முன்னேற்றங்கள், அதன் சுருக்கங்கள் அல்லது விரிவுகள், அதன் வளர்ச்சி, ஸ்திரப்பாடு ஆகியன முதலாளித்துவ வர்க்கத்திற்கும் கட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் இடையிலுள்ள உறவுகளுடன் தவிர்க்கப்பட முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைப்பது அல்லது அதைத் தகர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றபோது அதைத் தகர்ப்பது என்ற பிரச்சினையில் சரியான அரசியல் மார்க்கமொன்றைக் கைக்கொள்ளும்போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமய மாக்கத்திலும் ஒரு படி முன்னேறுகின்றது; ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள உறவுகளில் தவறான மார்க்கமொன்றைக் கைக்கொள்ளும்போது எமது கட்சி தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமயமாக்கத்திலும் ஒரு படி பின்னடைகின்றது. அது போலவே, எமது கட்சி புரட்சிகர ஆயுதப் போராட்டப் பிரச்சினையைச் சரியான முறையில் கையாளும்போது தன் வளர்ச்சியிலும் ஸ்திரப்பாட்டிலும் போல்ஷ்வியமய மாக்கத்திலும் ஒரு படி முன்னேறுகின்றது; ஆனால், அந்தப் பிரச்சினையைத் தவறாகக் கையாளும்போது அது ஒரு படி பின்னடைகிறது.
இவ்வாறு, பதினெட்டு ஆண்டுகளாக, கட்சியின் அமைப்பும் போல்ஷ்விய மயமாக்கமும் அதன் அரசியல் மார்க்கத்துடன், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சனைகளைச் சரியாக அல்லது தவறாக கையாள்வதுடன் மிக நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தால் தெளிவாக நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. வேறு விதமாகக் கூறின், கட்சி எவ்வளவிற்குப் போல்ஷ்வியமயமாகின்றதோ அவ்வளவிற்குத் தனது அரசியல் மார்க்கத்தைச் சரியாகத் தீர்மானிக்கவும் ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகிய பிரச்சினைகளைச் சரியாகக் கையாளவும் முடியும். இந்த முடிவும் எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தாலேயே தெளிவாக நிரூபிக்கப்படுகின்றது.
ஆகவே, ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமும் கட்சி அமைப்புமே சீனப் புரட்சியில் எமது கட்சியின் மூன்று அடிப்படைப் பிரச்சினைகளாக இருக்கின்றன. இந்த மூன்று பிரச்சினைகளையும் அவற்றிற்கிடையேயுள்ள தொடர்புகளையும் சரியாகக் கிரகித்துக்கொள்வது சீனப் புரட்சி முழுவதிற்கும் தகுந்த தலைமையளிப்பதற்குச் சமமாகும். எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தில் பெற்ற எமது செழிப்பான அனுபவத்தினால், தோல்வி வெற்றிகளினதும் பின்னேற்ற முன்னேற்றங்களினதும் சுருக்க விரிவுகளினதும் ஆழமான செழுமைமிக்க எமது அனுபவத்தினால் நாம் இந்த மூன்று பிரச்சினைகளையும் பொறுத்தவரை இப்பொழுது சரியான முடிவுகளை எடுக்கக்கூடியவர்களாக இருக்கிறோம். அதாவது நாம் இப்பொழுது ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு ஆகிய பிரச்சினைகளைச் சரியான முறையில் கையாளக்கூடியவர்களாக இருக்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறின், ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமும் கட்சி அமைப்பும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று மந்திர ஆயுதங்கள், சீனப் புரட்சியில் எதிரியைத் தோற்கடிப்பதற்கான அதன் மூன்று முக்கிய மந்திர ஆயுதங்கள் என எமது பதினெட்டாண்டுகால அனுபவம் எமக்குக் கற்பித்திருக்கின்றது. இது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான சாதனை; இது சீனப் புரட்சியின் மகத்தான சாதனையுமாகும்.
மூன்று மந்திர ஆயுதங்களில் ஒவ்வொன்றையும், மூன்று பிரச்சினைகளில் ஒவ்வொன்றையும் இங்கே சுருக்கமாக ஆராய்வோம்.
முதலாளித்துவ வர்க்கத்துடனும் பிற வர்க்கங்களுடனும் சீனப் பாட்டாளி வர்க்கத்திற்குள்ள ஐக்கிய முன்னணி கடந்த பதினெட்டு ஆண்டுகளில் மூன்று வேறுபட்ட சூழ்நிலைகளில், மூன்று வேறுபட்ட கால கட்டங்களுக்கு ஊடாக வளர்ச்சி அடைந்திருக்கின்றது. அதாவது, 1924ம் ஆண்டிற்கும் 1927ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட முதலாவது மாபெரும் புரட்சி, 1927ம் ஆண்டிற்கும் 1937ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட நிலப்புரட்சி யுத்தம் தற்போதைய ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தம். இந்த மூன்று கட்டங்களினதும் சரித்திரம் பின்வரும் நியதிகளை நிரூபித்திருக்கின்றது:
1) சீனா உட்படுத்தப்பட்டுள்ள அந்நிய அடக்குமுறை, அடக்குமுறைகளிலே மிகப் பெரியதாய் இருப்பதன் காரணமாக, சீனத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கும் நிலப்பிரபுத்துவ யுத்தப்பிரபுக்களுக்கும் எதிரான போராட்டத்தில் குறிப்பிட்ட காலங்களில் குறிப்பிட்ட அளவிற்குப் பங்குபெறும். ஆகவே, அப்படிப்பட்ட சமயங்களில் பாட்டாளிவர்க்கம் தேசிய முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றை அமைத்து அதை இயலுமானவரை நிலைநிறுத்த வேண்டும்.
2) சீனத் தேசிய முதலாளித்துவ வர்க்கம் தன் பொருளாதார, அரசியல் உறுதிப்பாடின்மை காரணமாக, பிற சரித்திரச் சூழ்நிலைகளில் ஊசலாட்டமும் மாறும் இயல்பும் உள்ளதாகும். ஆகவே சீனாவின் புரட்சிகர ஐக்கிய முன்னணியின் அமைப்பு தொடர்ந்து எல்லாக் காலங்களிலும் ஒரே மாதிரியாக இல்லாமல் மாறக்கூடியதாக இருக்கின்றது. தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஒரு காலத்தில் அதில் பங்கு பற்றலாம், இன்னொருகாலத்திற் பங்கு பற்றாமலிருக்கலாம்.
3) தரகு முதலாளித்துவத் தன்மையுடைய சீனப் பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு நேரடியாகச் சேவை செய்து, அதனால் ஊட்டிவளர்க்கப்படும் வர்க்கம். இதனால் தரகு முதலாளித்துவத் தன்மையுடைய சீனப் பெரும் முதலாளித்துவ வர்க்கம் எப்பொழுதும் புரட்சியின் இலக்காக இருந்துவருகின்றது. இருப்பினும், இந்தப் பெரும் முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ள வேறுபட்ட கும்பல்கள் வேறுபட்ட ஏகாதிபத்தியங்களால் ஆதரிக்கப்படுகின்றன. ஆகவே இந்த ஏகாதிபத்தியங்களுக்கிடையே முரண்பாடுகள் கூர்மையடையும் போதும் புரட்சியின் முனை குறிப்பிட்ட ஏகாதிபத்தியமொன்றிற்கு எதிராகப் பிரதானமாக நீட்டப்படும் பொழுதும் பிற ஏகாதிபத்தியங்களைச் சார்ந்திருக்கும் இப்பெரும் முதலாளித்துவ வர்க்கக் கும்பல்கள் அந்தக் குறிப்பிட்ட ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் சேரலாம். அப்படிபட்ட சமயங்களில் எதிரியைப் பலவீனப்படுத்தவும் தனது சொந்தச் சேமிப்பு சக்தியைப் பலப்படுத்தவும் சீனப் பாட்டாளி வர்க்கம் இந்தப் பெரும் முதலாளித்துவ வர்க்கக் கும்பல்களுடன் சாத்தியமான ஐக்கிய முன்னணியொன்றை ஏற்படுத்தலாம். அத்துடன் அது புரட்சிக்குச் சாதகமானதாயிருக்கும் வரை அதை இயலுமான அளவு நிலை நிறுத்தவும் வேண்டும்.
4) தரகு முதலாளித்துவத்தன்மையுடைய பெரும் முதலாளித்துவ வர்க்கம் ஐக்கிய முன்னணியிற் சேர்ந்து பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து பொது எதிரிக்கெதிராகப் போராடும் போதும் அது தொடர்ந்து மிகவும் பிற்போக்கானதாகவே இருக்கிறது. அது பாட்டாளி வர்க்கத்தினதும் பாட்டாளி வர்க்கக் கட்சியினதும் சித்தாந்த, அரசியல், ஸ்தாபனரீதிகளிலான எந்த வளர்ச்சியையும் பிடிவாதமாக எதிர்க்கிறது; அவற்றிற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க முயல்கிறது; வஞ்சகம், முகஸ்துதி, "அரித்தல்", தாக்குதல்கள் போன்ற சீர்குலைக்கக்கூடிய கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றது; மேலும், எதிரிகளிடம் சரணடைவதற்கும் தயார் செய்வதற்காகவே இவற்றையெல்லாம் செய்கிறது.
5) விவசாயிகள் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான நேச அணியாவர்.
6) நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கமும் ஒரு நம்பகமான நேச அணியாகும். இந்த நியதிகள் சரியானவை என்பது முதலாம் மாபெரும் புரட்சியின் போதும் நிலப்புரட்சியின் போதும் நிரூபிக்கப்பட்டது மாத்திரமல்ல அது தற்போதைய ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின்போதும் திரும்பவும் நிரூபிக்கப்பட்டு வருகின்றது. ஆகவே முதலாளித்துவ வார்க்கத்துடன் ( சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கத்துடன்) ஐக்கிய முன்னணியை அமைப்பதில் பாட்டாளி வர்க்க அரசியல் கட்சி இரண்டு முன்னணிகளில் திடமான, கடுமையான போராட்டமொன்றை மேற்கொள்ள வேண்டும். ஒருபுறம், முதலாளித்துவ வர்க்கம் ஒரு குறிப்பிட காலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவிலும் புரட்சிகரப் போராட்டத்தில் கலந்து கொள்ளலாம் என்ற சாத்தியப்பாட்டை அலட்சியம் செய்யவும் தவற்றை எதிர்த்துப் போரிடுவது அவசியம்.
இந்தத் தவறு சீனாவிலுள்ள முதலாளித்துவ வர்க்கத்தை முதலாளித்துவ நாடுகளிலுள்ளவற்றைப்போல் கருதி முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கிய முன்னணியொன்றினை உருவாக்கி அதை இயலுமான அளவிற்கு நிலைநிறுத்தும் கொள்கையை அலட்சியம் செய்வதில் அமைந்துள்ளது. இது "இடதுசாரிக்" கதவடைப்புவாதம் ஆகும். மறுபுறம், பாட்டாளி வர்க்கத்தின் வேலைத்திட்டம், கொள்கை, சித்தாந்தம், நடைமுறை, இன்னோரன்ன பிறவற்றை முதலாளித்துவ வர்க்கத்தினுடையனவற்றைப்போல் கருதி, இவற்றிற்கிடையிலுள்ள கோட்பாட்டு ரீதியான வித்தியாசங்களை அலட்சியம் செய்வது என்ற தவற்றை எதிர்த்தும் போரிடுவது அவசியம். இந்தத் தவறு முதலாளித்துவ வர்க்கம் (சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கம்) குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் மீதும் விவசாயிகள் மீதும் தன் செல்வாக்கைத் தீவிரமாகச் செலுத்துவது மட்டுமின்றி, பாட்டாளி வர்க்கத்தின் மீதும் கம்யூனிஸ்ட் கட்சியின் மீதும் தன் செல்வாக்கைச் செலுத்தி, பாட்டாளி வர்க்கத்தினதும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் சித்தாந்த, அரசியல், ஸ்தாபன சுதந்திரத்தை அழிப்பதற்கும் அவற்றை முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் தொங்கு தசையாக மாற்றுவதற்கும், தன் அரசியல் கட்சியே தனியாகப் புரட்சியின் கனிகளை அறுவடை செய்வதற்கும் தன்னால் இயன்றமட்டும் முயலும் என்ற உண்மையை அலட்சியம் செய்வதில் அமைந்திருக்கிறது.அத்துடன் முதலாளித்துவ வர்க்கம் (சிறப்பாகப் பெரும் முதலாளித்துவ வர்க்கம்) தன் சொந்த அரசியல் கட்சியின் சுயநலன்களுடனோ புரட்சி மோதும்போது புரட்சிக்குத் துரோகம் செய்யும் என்பதை அலட்சியம் செய்வதிலும் இந்தத் தவறு அமைந்திருக்கின்றது. இவற்றையெல்லாம் அலட்சியம் செய்வது வலதுசாரிச் சந்தர்ப்பவாதமாகும். முன்பு சென்து-சியூவின் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தின் விசேஷ அம்சம் என்னவென்றால் முதலாளித்துவ வர்க்கத்தினதும் அதன் அரசியல் கட்சியினதும் சுயநலன்களுக்கு இசைவாக பாட்டாளி வர்க்கத்தை வழி நடத்திசென்றதேயாகும். இது முதலாவது மாபெரும் புரட்சியின் தோல்வியின் அகநிலைக் காரணமாகவும் இருந்தது. முதலாளித்துவ வர்க்க ஜனநாயகப் புரட்சியின் சீன முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த இரட்டைத் தன்மை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மார்க்கத்திற்கும் கட்சி அமைப்பிற்கும் பெரும் பாதிப்பை உண்டாக்குகிறது. இந்த இரட்டைத் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மார்க்கத்தையும் கட்சி அமைப்பையும் புரிந்துகொள்ள முடியாது.முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதோடு அதற்கெதிராகப் போராடுவது என்ற கொள்கை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் வழியின் ஒரு முக்கிய பகுதியாகும். உண்மையில், முதலாளித்துவ வர்க்கத்துடனுள்ள ஐக்கியத்திற்கும் போராட்டத்திற்கும் ஊடாக ஏற்படும் கட்சியின் வளர்ச்சியும் புடமிடப்படுத்தலும் கட்சியமைப்பின் முக்கிய பகுதியாகும். ஐக்கியமென்பது இங்கு முதலாளித்துவ வர்க்கத்துடனான ஐக்கிய முன்னணியைக் குறிக்கிறது. போராட்டம் எனப்து இங்கு நாம் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமுடையவராயிருக்கையில் இருக்கும் "சமாதான" மான, "ரத்தம் சிந்தாத", சித்தாந்த, அரசியல், ஸ்தாபனரீதிகளிலான போராட்டத்தைக் குறிக்கிறது. நாம் அதனுடன் பிளவுபடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுது அது ஆயுதப் போராட்டமாக மாறும். குறிப்பிட்ட சமயத்தில் முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டுமென்பதை எமது கட்சி உணர்ந்து கொள்ளாவிட்டால் அதனால் முன்னேறமுடியாது, புரட்சியும் வளர்ச்சியடைய முடியாது.முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமுடையதாயிருக்கும்போது அதனுடன் திடமான, கடுமையான, "சமாதான" மான போராட்டம் நடத்தவேண்டும் என்பதை எமது கட்சி உணராவிட்டால் எமது கட்சி சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபன ரீதியிலும் சிதைவுறும்; புரட்சியும் தோல்வியடையும். முதலாளித்துவ வர்க்கத்துடன் பிளவுபட நிர்ப்பந்திக்கப்படும்போது எமது கட்சி திடமான, கடுமையான ஆயுதப் போராட்டத்தை நிகழ்தாவிட்டாலும் அது சிதைவுறும்; புரட்சியும் தோல்வியடையும். இந்த உண்மைகளெல்லாம் கடந்த பதினெட்டாண்டுகால வரலாற்றால் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டம் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயி யுத்தம் ஆகும். இந்த ஆயுதப் போராட்டத்தின் சரித்திரமும் மூன்று காலகட்டங்களாக பிரிக்கப்படுகிறது. முதலாவது காலகட்டத்தில் நாம் வடபடையெடுப்பில் ஈடுபட்டோம். அக்காலத்தில் எமது கட்சி ஏற்கனவே ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை உணரத் தொடங்கியிருந்தது, ஆனால், அதை அப்போது முற்றாகப் புரிந்துகொள்ளவில்லை; ஆயுதப் போராட்டம் சீனப் புரட்சியின் பிரதான போராட்ட வடிவம் என்பதை அது அப்போது புரிந்துகொள்ளவில்லை. இரண்டாவது கால கட்டம் நிலப்புரட்சி யுத்தம். அந்தக் காலத்தில் எமது கட்சி தன் சொந்த ஆயுதப்படையை ஏற்கனவே கட்டியமைத்திருந்தது; தனக்கேயுரிய யுத்தக்கலையைக் கற்றுக் கொண்டது, அத்துடன் மக்கள் அரசியலதிகாரத்தையும் தளப்பிரதேசங்களையும் நிறுவியது. எமது கட்சி பிரதான போராட்ட வடிவமாகிய ஆயுதப் போராட்டத்தை இதர பல அவசியமான போராட்ட வடிவங்களுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக இணைக்க இயலுமானதாயிருந்தது. அதாவது, அதனைத் தொழிலாளர் போராட்டம், விவசாயிகள் போராட்டம் (இதுதான் பிரதானமானது), இளைஞர், பெண்கள், மக்களின் ஏனைய பிரிவுகள் அனைத்தினதும் போராட்டங்கள், அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம், பொருளாதார, தேசத்துரோகி எதிர்ப்பு, சித்தாந்தத் துறைகளிலுள்ள போராட்டங்கள், இதர போராட்ட வடிவங்கள் ஆகியவற்றுடன் தேசியரீதியில் நேரடியாக அல்லது மறைமுகமாக இணைப்பதற்கு இயலுமானதாயிருந்தது. அத்துடன் இந்த ஆயுதப் போராட்டம் உண்மையில் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான விவசாயி நிலப்புரட்சிப் போராட்டமாகவும் இருந்தது. மூன்றாவது காலகட்டம் தற்போதைய ஜப்பானிய-எதிர்ப்பு யுத்தக் காலகட்டம். இந்தக் காலகட்டத்தில் முதலாவது காலகட்டத்தினதும் விசேஷமாக இரண்டாவது காலகட்டத்தினதும் எமது ஆயுதப் போராட்ட அனுபவத்தையும் ஆயுதப் போராட்டத்தைத் தேவையான இதர போராட்ட வடிவங்களணைத்துடனும் இணைப்பதில் பெற்ற அனுபவத்தையும் பயனுடையதாக்கக் கூடியவர்களாயிருக்கிறோம். பொதுவாகக் கூறின், ஆயுதப்போராட்டம் என்பது இப்போது கொரில்லா யுத்தத்தையே குறிக்கிறது. கொரில்லா யுத்தமென்றால் என்ன? அது பின்தங்கிய நாடொன்றில், பெரிய அரைக்காலனித்துவ நாடொன்றில் மக்களின் ஆயுதப் படைகள் ஆயுதபாணியாக்கப்பட்ட எதிரியை முறியடித்துத் தம் சொந்தத் தளப்பிரதேசங்களை அமைப்பதற்கு நீண்டகாலம் சார்ந்திருக்க வேண்டிய ஒன்றாகவும் அதன் காரணமாக மிக சிறந்த போராட்ட வடிவமாகவும் விளங்குகிறது. இதுகாலம்வரை எமது கட்சியின் அரசியல் வழியும், கட்சி கட்டுதல் ஆகிய இரண்டும் இந்தப் போராட்ட வடிவத்துடன் மிக நெருக்கமாக இணைந்திருக்கின்றன. ஆயுதப் போராட்டத்தையும் கொரில்லா யுத்தத்தையும் கைவிட்டால் எமது அரசியல் மார்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியாததோடு எமது கட்சி கட்டும் முறையையும் புரிந்துகொள்ள முடியாது. ஆயுதப் போராட்டம் என்பது எமது அரசியல் வழியின் ஒரு முக்கியப் பகுதியாகும். பதினெட்டு ஆண்டுகளாக, எமது கட்சி ஆயுதப் போராட்டம் நிகழ்த்தப் படிப்படியாகக் கற்று அதில் ஊன்றி நின்றுள்ளது. சீனாவில் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், பாட்டாளி வர்க்கத்துக்கு எவ்வித அந்தஸ்தும் கிடையாது; மக்களுக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது; கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்தவித அந்தஸ்தும் கிடையாது; புரட்சியும் வாகை சூடாதென்று புரிந்து கொண்டோம். பதினெட்டு ஆண்டுகளில் நமது கட்சியின் வளர்ச்சியும் ஸ்திரப்பாடும் போல்ஷ்வியமயமாக்கமும் புரட்சி யுத்தங்களின் மத்தியில்தான் நடைபெற்றன. ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால், கம்யூனிஸ்ட் கட்சி இன்றுள்ள நிலையில் இருக்க முடியாது. ரத்தம் சிந்திப் பெற்ற இந்த அனுபவத்தைக் கட்சித் தோழர்கள் ஒருவரும் மறந்துவிடக்கூடாது.
முன்னவை போலவே, கட்சி அமைப்பிலும் அதாவது அதன் வளர்ச்சி, ஸ்திரப்பாடு, போல்ஷ்வியமயமாக்கம் ஆகியவற்றிலும் மூன்று தெளிவான கட்டங்கள் இருந்திருக்கின்றன. முதலாவது கட்டம் கட்சியின் குழந்தைப் பிராயம். இந்தக் கட்டத்தின் ஆரம்பகாலத்திலும் மத்திய காலத்திலும் கட்சியின் வழி சரியாகவும் கட்சி அங்கத்தவர்களினதும் ஊழியர்களினதும் புரட்சிகர உற்சாகம் மிக உயர்ந்ததாகவும் இருந்தன. இதன் விளைவானதே முதலாம் மாபெரும் புரட்சியின் வெற்றிகள். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக எமது கட்சி அப்பொழுது குழந்தைப் பிராயத்தில் உள்ள ஒரு கட்சியாக இருந்தது. ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம், கட்சி கட்டும்முறை ஆகிய மூன்று அடிப்படைப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை அனுபவமற்றதாக இருந்தது. அது சீனச் சரித்திர நிலைமையைப் பற்றியோ அன்றிச் சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள் பற்றியோ, சீனப் புரட்சியின் நியதிகள் பற்றியோ நன்கு அறிந்திருக்கவில்லை. மார்க்சிய - லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கு இடையிலுள்ள ஐக்கியத்தை விபரமாகப் புரிந்துகொள்வதில் குறைபாடுடையதாக இருந்தது. இதனால் இந்தக் கட்டத்தின் கடைசிக் காலத்தில், அதாவது இந்தக் கட்டத்தின் நெருக்கடியான தருணத்தில், கட்சியின் தலைமைப் பகுதியில் அதிகார அந்தஸ்துடையவராயிருந்தோர் புரட்சியின் வெற்றிகளை ஸ்திரப்படுத்துவதில் முழு கட்சியையும் வழிநடத்தத் தவறி, முதலாளித்துவ வர்க்கத்தினால் ஏமாற்றப்பட்டுப் புரட்சிக்குத் தோல்வியைக் கொண்டு வந்தனர். இந்தக் கட்டத்தில் கட்சி ஸ்தாபனங்கள் விரிவடைந்தன; ஆனால் அவை ஸ்திரப்படுத்தப்படவில்லை. அத்துடன் கட்சி அங்கத்தவர்களும் ஊழியர்களும் சித்தாந்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் திடமானவராக ஆகுவதற்கு உதவவும் அவை தவறிவிட்டன. பல புதிய கட்சி அங்கத்தவர்களிருந்தனர்; ஆனால், அவர்களுக்குத் தேவையான மார்க்சிய - லெனினியக் கல்வி அளிக்கப்படவில்லை. வேலையில் மிகுந்த அனுபவம் இருந்தபோதிலும் அது தகுந்த முறையிற் தொகுக்கப்படவில்லை. பதவி வேட்டையாளர் பலர் கட்சிக்குள் நுழைந்தனர்; ஆனால் அவர்கள் வெளியே இழுத்தெறியப்படவில்லை. கட்சி எதிரிகளினதும் நேச அணிகளினது சூழ்ச்சிகளாலும் சதிகளாலும் சுற்றிவளைக்கப் பட்டிருந்த போதிலும் அது போதிய விழிப்புணர்வுடையதாக இருக்கவில்லை. கட்சிக்குள் உற்சாகிகள் பெருந்தொகையாக முன்வந்தனர்; ஆனால் அவர்கள் தகுந்த சமயத்திற் கட்சியின் முதுகெலும்பாகப் பயிற்றுவிக்கப் படவில்லை. கட்சி ஆயுதந்தாங்கிய புரட்சிகரப் பிரிவுகள் சிலவற்றைத் தன் ஆணைக்கீழ்க் கொண்டிருந்தது; ஆனால், அதனால் அவற்றை இறுகப்பற்றமுடியவில்லை. அனுபவமின்மையும் புரட்சிகர அறிவாற்றலில் போதிய ஆழமின்மையும் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தைச் சீனப் புரட்சியின் நடைமுறையுடன் சரியாக இணைப்பதில் தேர்ச்சி பெறாமையுமே இவையனைத்துக்குமான காரணங்கள்; இப்படியானதுதான் கட்சி அமைப்பின் முதலாவது கட்டம். இரண்டாவது கட்டம் நிலப்புரட்சி யுத்தகாலம். முதலாவது கட்டத்தில் பெற்ற அனுபவத்தாலும் சீன வரலாற்று நிலைமை, சீன சமுதாய நிலைமை, சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள், சீனப் புரட்சியின் நியதிகள் ஆகியவை பற்றி முன்பைவிட நன்கு புரிந்துகொண்டதாலும் அதன் ஊழியர்கள் மார்க்சிய-லெனினியத் தத்துவத்தை முன்பைவிட நன்கு கிரகித்து அதனைச் சீனப் புரட்சியின் நடைமுறையுடன் மேலும் இணைக்கக்கூடியவர்களாக இருந்தாலும் எமது கட்சி நிலப்புரட்சிப் போராட்டமொன்றினைப் பத்து வருடங்களுக்கு வெற்றிகரமாக நிகழ்த்தக்கூடியதாயிருந்தது.
முதலாளித்துவ வர்க்கம் துரோகம் செய்தபோதிலும் எமது கட்சி திடமாக விவசாயிகளை சார்ந்து நின்றது. கட்சி ஸ்தாபனம் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்ல அது ஸ்திரப்பாடுடையதாகவும் ஆயிற்று. நாளிலும் பொழுதிலும் எதிரி எமது கட்சியைக் கவிழ்க்க முயன்றபோதிலும் கட்சி சதிகாரர்களை வெளியே துரத்தியது. மீண்டும் ஒருமுறை பெருந்தொகையான ஊழியர்கள் கட்சிக்குள் வந்ததோடு கட்சியின் முதுகெலும்பாகத் திகழ்ந்தனர். கட்சி, மக்கள் அரசியல் அதிகாரப் பாதையைத் திறந்துவைத்ததன் பயனாக ஆட்சிக் கலையைக் கற்றுக்கொண்டது. எமது கட்சி பலம் வாய்ந்த ஆயுதப் படைகளை உருவாக்கியதன் பயனாக யுத்தக்கலையைக் கற்றுக் கொண்டது. இவை எல்லாம் எமது கட்சியின் மிக முக்கியமான முன்னேற்றங்களும் சாதனைகளும் ஆகும். இருந்த போதிலும், இந்த மகத்தான போராட்டங்களின் போக்கில் எமது தோழர்களில் சிலர் சந்தர்ப்பவாதச் சேற்றில் மூழ்கினர் அல்லது குறைந்தது சிறிது காலத்திற்காவது அவ்வாறாயினர். காரணங்கள் திரும்பவும், அவர்கள் கடந்த கால அனுபவங்களிலிருந்து அடக்கமாகக் கற்றுக் கொள்ளாமையும் சீன வரலாற்று நிலைமை, சீன சமுதாய நிலைமை, சீனப் புரட்சியின் சிறப்பு அம்சங்கள், சீனப் புரட்சியின் நியதிகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளாமையும் அவர்களுக்கு மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையில் அறிவாற்ற இன்மையும் ஆகும். ஆகவே இந்தக் கட்டம் பூராவும், கட்சியின் தலைமை பதவிகளில் இருந்து சிலர் அரசியல், ஸ்தாபனரீதிகளிலான சரியான மார்க்கங்களில் ஊன்றி நிற்கத் தவறினர். கட்சியும் புரட்சியும் ஒருசமயம் தோழர் லீ லி - சன்னின் "இடதுசாரி" சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன; இன்னொருசமயம் புரட்சிகர யுத்தத்திலும் வெண்பிரதேச வேலைகளிலுமிருந்த "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாதத்தால் பாதிக்கப்பட்டன. சுன்யிக் கூட்டத்தின் (1935ம் ஆண்டு ஜனவரி மாதம் குவெய்சௌ மாகாணத்திலுள்ள சுன்யியில் நடந்த மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் கூட்டம்) பின்னர் கட்சி போல்ஷ்வியமயமாக்கப் பாதையை முற்றாக மேற்கொண்டதோடு, அதைத் தொடர்ந்து சாங் கோ-தௌவின் வலதுசாரிச் சந்தர்ப்பவாதத்தை வெற்றி கொள்வதற்கும் ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றினை ஸ்தாபிப்பதற்குமான அஸ்த்திவாரத்தையும் இட்டது. இதுதான் கட்சியின் வளர்ச்சியின் இரண்டாவது கட்டம். கட்சியின் வளர்ச்சியின் மூன்றாவது கட்டம் ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணிக் காலம். இந்தக் கட்டத்தில் மூன்றாண்டுகள் கடந்துவிட்டன. இம்மூன்றாண்டுப் போராட்டம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. முன்னைய இரண்டு புரட்சிகரக் காலகட்டங்களினதும் அனுபவத்தினாலும் தனது ஸ்தாபன பலம், ஆயுத சக்திகளின் பலம் ஆகியவற்றினாலும் நாடுபூராவுமுள்ள மக்களிடையே தனக்குள்ள உயர்ந்த அரசியல் செல்வாக்காலும் மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையேயுள்ள ஐக்கியத்தில் தனக்குள்ள மேலும் ஆழமான அறிவாற்றலாலும் எமது கட்சி ஜப்பானிய - எதிர்ப்புத் தேசிய ஐக்கிய முன்னணியொன்றை அமைத்திருப்பது மட்டுமின்றி, மாபெரும் ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தையும் நடத்துகின்றது. ஸ்தாபனரீதியில், அது தன் குறுகிய எல்லையைக் கடந்து, தேசிய அளவிலான ஒரு பிரதான கட்சியாகியிருக்கிறது. கட்சியின் ஆயுத சக்திகள் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளருக்கெதிரான போராட்டத்தில் திரும்பவும் வளர்வதோடு மேலும் பலமுடையதாகவும் ஆகின்றன. நாடு பூராவுமுள்ள மக்களிடையேயும் கட்சியின் செல்வாக்கு இன்னும் பரந்ததாகின்றது. இவையெல்லாம் மகத்தான சாதனைகள். இருப்பினும், எமது கட்சியின் புதிய அங்கத்தவர் பலருக்கு இன்னும் கல்வியளிக்கப்படவில்லை. புதிய ஸ்தாபானங்கள் பல இன்னும் ஸ்திரப்படுத்தப் படவில்லை. கட்சியின் புதிய அங்கத்தவருக்கும் பழைய அங்கத்தவருக்கும் இடையிலும் பெரிய வித்தியாசம் இன்னும் நிலவுகின்றது. கட்சியின் புதிய அங்கத்தவர் பலரும் ஊழியர் பலரும் இன்னும் போதியளவு புரட்சிகர அனுபவம் பெறவில்லை. அவர்கள் சீனாவின் வரலாற்று நிலைமை, சமுதாய நிலைமை ஆகியவை பற்றியும், சீனப் புரட்சியின் விசேஷ அம்சங்கள், நியதிகள் ஆகியன பற்றியும் எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள் அல்லது இன்னும் சிறிதளவே அறிந்திருக்கின்றனர்; மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்குமிடையிலுள்ள ஐக்கியத்தைப் புரிந்துகொள்ளும் அவர்களின் ஆற்றல் விரிவானதாயுள்ளது என்று கூறுவதற்கே இடமில்லை.
கட்சி ஸ்தாபனத்தின் வளர்ச்சியின்போது, மத்திய கமிட்டி, "கட்சியைத் தைரியமாக வளருங்கள்; ஆனால், தீயநபர்கள் ஒருவரையும் கட்சிக்குள் அனுமதிக்காதீர்கள்" என்ற முழக்கத்தை வலியுறுத்தி முன்வைத்தைபோதிலும் உண்மையில் கணிசமான அளவு பதவி வேட்கையாளரும் எதேச்சதிகாரரும் கட்சிக்குள் நுழைவதில் வெற்றிக்கண்டனர். ஐக்கிய முன்னணி அமைக்கப்பட்டு, மூன்றாண்டுகள் நிலைநிறுத்தப்பட்டபோதிலும், முதலாளித்துவ வர்க்கம் குறிப்பாக, பெரும் முதலாளித்துவ வர்க்கம் எமது கட்சியை அழிப்பதற்கு இடைவிடாது முயல்கின்றது; பெரும் முதலாளித்துவ வர்க்கச் சரணாகதிவாதிகளினதும் பிடிவாதவாதிகளினதும் தலைமையிலான கடுமையான மோதல்கள் நாடுமுழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன; கம்யூனிஸ்ட் கட்சி - எதிர்ப்புக் கூச்சலுக்கும் ஓய்வில்லை. இவையெல்லாம் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடம் சரணடைவதற்கும் ஐக்கிய முன்னணியைத் தகர்ப்பதற்கும் சீனாவைப் பின்நோக்கி இழுத்துச்செல்வதற்கும் தயார் செய்வதற்காகப் பெரும் முதலாளித்துவ வர்க்கச் சராணாகதிவாதிகளாலும் பிடிவாதவாதிகளாலும் உபயோகிக்கப் படுகின்றன.
பெரும்முதலாளித்துவ வர்க்கம் சித்தாந்த ரீதியிலே கம்யூனிஸத்தை "அரிக்க" முயல்கிறது. அதேவேளையில் அரசியல் ரீதியிலும் ஸ்தாபனரீதியிலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எல்லைப்பிரதேசத்திற்கும் கட்சியின் ஆயுத சக்திகளுக்கும் முடிவுகட்ட முயல்கின்றது. இச்சூழ்நிலைகளில், சந்தேகமின்றி, எமது கடமை சரணடைவு, பிளவு, பின்னடைவு ஆகிய ஆபத்துக்களைச் சமாளிப்பதும் தேசிய ஐக்கிய முன்னணியையும் கோமிந்தாங் - கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டுறவையும் இயன்ற அளவு நிலைநிறுத்துவதும் தொடர்ந்து ஜப்பானிய - எதிர்ப்பிற்காகவும் ஐக்கியம், முன்னேற்றம் ஆகியவற்றிற்காகவும் வேலை செய்வதுமாகும். அதேவேளையில், எதிர்பாராதபடி சம்பவிக்கக்கூடிய சம்பவங்களைச் சமாளிப்பதற்குத் தயார் செய்யவேண்டும். இதனால், அச்சம்பவங்கள் நிகழும் சமயத்திற் கட்சியும் புரட்சியும் எதிர்பாராத இழப்பிற்குள்ளாகமாட்டா. ஆகவே, நாம் எமது கட்சி ஸ்தாபனத்தையும் அதன் ஆயுதசக்திகளையும் ஸ்திரப்படுத்தி, சரணடைவிற்கும், பிளவிற்கும், பின்னடைவிற்கும் எதிரான திடமான போராட்டத்திற்காக நாடுபூராவுமுள்ள மக்களை அணிதிரட்ட வேண்டும். இந்தக் கடமையை நிறைவேற்றுவது கட்சி முழுவதினதும் முயற்சிகளிலும் கட்சி அங்கத்தவர்களைனைவரதும் ஊழியர்கள் அனைவரதும், எல்லா மட்டங்களிலும் இடங்களிலுமுள்ள ஸ்தாபனங்கள் அனைத்தினதும் தளராத, உறுதியான போராட்டத்திலும் தங்கியுள்ளது. பதினெட்டு ஆண்டுகால அனுபவத்தைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனுபவமிக்க பழைய அங்கத்தவரதும் ஊழியரதும் சுறுசுறுப்பும் இளமையுமுடைய புதிய அங்கத்தவரதும் ஊழியரதும் கூட்டு முயற்சிகளினாலும், புடமிடப்பட்டு, போல்ஷ்வியமயமாக்கப்பட்ட மத்திய கமிட்டியினதும் அதன் ஸ்தல ஸ்தாபனங்களினதும் கூட்டு முயற்ச்சிகளினாலும் அதன் பலமிக்க ஆயுத சக்திகளினதும் முற்போக்கான பொதுமக்களினதும் கூட்டு முயற்சிகளினாலும் இந்த நோக்கங்களை நிறைவேற்ற இயலும் என நம்புகின்றோம்.
இவையெல்லாம் எமது கட்சியின் பதினெட்டாண்டுகாலச் சரித்திரத்தின் பிரதான அனுபவங்களும் அதன் பிரதான பிரச்சினைகளுமாகும்.
ஐக்கிய முன்னணியும் ஆயுதப் போராட்டமுந்தான் எதிரியைத் தோற்கடிப்பதற்கான இரண்டு அடிப்படை ஆயுதங்களென எமது பதினெட்டாண்டுகால அனுபவங்கள் காட்டுகின்றன. ஐக்கிய முன்னணி ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்துவதற்கான ஐக்கிய முன்னணியாகும். கட்சி ஸ்தாபனந்தான் எதிரியின் நிலைகளைத் தகர்ப்பதற்கு இவ்விரு ஆயுதங்களையும் அதாவது ஐக்கிய முன்னணியையும் ஆயுதப் போராட்டத்தையும் கையாளும் வீரமிக்க போர்வீரன். இவ்வாறுதான் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையனவாய் உள்ளன.
நாம் இன்று எமது கட்சியை எப்படிக் கட்சியமைக்க வேண்டும்? "தேசிய அளவிலானதும் வெகுஜன இயல்புள்ளதும் சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஸ்தாபான ரீதியிலும் முற்றாக ஸ்திரப்படுத்தப்பட்டதுமான போல்ஷ்வியமயமான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றினை" எம்மால் எப்படிக் கட்டியமைக்க முடியும்? கட்சியின் சரித்திரத்தை ஆராய்வதுமூலமும், ஐக்கிய முன்னணி, ஆயுதப் போராட்டம் ஆகியவற்றுடன் தொடர்பு உடையதாகவும், முதலாளித்துவ வர்க்கத்துடன் ஐக்கியமாவது அதற்கெதிராகப் போராடுவது என்ற பிரச்சினையுடனும் எட்டாவது மார்க்க ராணுவமும் புதிய நான்காவது சேனையும் ஜப்பானுக்கெதிரான கொரில்லா யுத்தத்தில் ஊன்றிநிற்பது ஜப்பானிய - எதிர்ப்புத் தளப்பிரதேசங்களை நிறுவுவது ஆகிய பிரச்சினைகளுடனும் தொடர்புடையதாகவும் எமது கட்சி அமைப்பைப் பற்றி ஆராய்வதன்மூலமும் இந்தக் கேள்விகளுக்கு விடை காணமுடியும்.
எமது கட்சி எஃகைப் போன்று திடமானதாக அமையவும் எமது கட்சி கடந்தகால வரலாற்றிலுள்ள தவறுகள் திரும்பவும் ஏற்படுவதைத் தவிர்க்கவும், மார்க்சிய-லெனினியத் தத்துவத்திற்கும் சீனப் புரட்சியின் நடைமுறைக்கும் இடையிலுள்ள ஒற்றுமையின் அடிப்படையில் எமது பதினெட்டாண்டுகால அனுபவத்தையும் எமது தற்போதைய புதிய அனுபவத்தையும் தொகுத்து, அதனைக் கட்சி முழுவதும் பரப்ப வேண்டும். இதுதான் எமது கடமை.
குறிப்புகள் :
1. ஜே.வி.ஸ்டாலின், "சீனப் புரட்சியின் எதிர்கால வாய்ப்புகள்".
2. சென் து-சியூ, முதலில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் ஒரு பேராசிரியனாக இருந்தான்; "புதிய வாலிபர்" என்ற இதழின் ஆசிரியரான காரணத்தால், அவன் பெயர் போனவனானான். செந்து-சியூ கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபகர்களுள் ஒருவனாவான். மே 4 இயக்ககாலத்தில் அவனுக்குக் கிடைத்த புகழாலும், ஆரம்ப கடத்தில் கடசி பக்குவமடையாததாயிருந்ததாலும் அவன் கட்சியின் பொதுச் செயலாளராகினான். 1924 - 1927ப் புரட்சியின் பிற்பகுதியில் கட்சியின் சென்து-சியூவாற் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட வலதுசாரிச் சிந்தனை சரணாகதிவாத மார்க்கமாக வளர்ந்தது. அப்போதைய "சரணாகதிவாதிகள் கட்சியின், விவசாயி வெகு ஜனங்களுக்கும் நகரக் குட்டி முதலாளித்துவ வர்க்கத்திற்கும் மத்திய முதலாளித்துவ வர்க்கத்திற்குமான தலைமையைத் தாமாகவே கைவிட்டு, குறிப்பாக, கட்சியின், ஆயுத சக்திகளுக்கான தலைமையைக் கைவிட்டுப் புரட்சியைத் தோல்விக்குள்ளாக்கினர்" (மாசேதுங், "இன்றைய நிலைமையும் நமது கடமைகளும்"). 1927ப் புரட்சியின் தோல்விக்கும் பின்னர் செந்து - சியூவும் இதர ஒருசில சரணாகதிவாதிகளும் புரட்சியின் எதிர்காலத்தில் நம்பிக்கை யிழந்து விலகல்வாதிகளாயினர். அவர்கள் பிற்போக்கு ட்ரொஸ்கியவாத நிலைப்பாட்டை மேற்கொண்டு, ட்ரொஸ்கியவாதிகளுடன் கூடி ஒரு சிறிய கட்சி - எதிர்ப்புக்கும்பலை உருவாக்கினர். இதனால் 1929 நவம்பரில் சென் து-சியூ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டான். 1942ல் அவன் இறந்தான்.
3. பொதுவாகக் கூறின், சீனப் புரட்சியின் ஆயுதப் போராட்டம் என்றால் கொரில்லா யுத்தமென்றே பொருள்படும் என்று கூறுமிடத்துத் தோழர் மாசேதுங் அவர்கள் இரண்டாவது புரசிகர உள்நாட்டு யுத்தம்முதல் ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் ஆரம்பகாலம் வரையிலான சீனாவின் புரட்சிகர யுத்த அனுபவங்களைத் தொகுக்கிறார். இரண்டாவது புரட்சிகர உள்நாட்டு யுத்த நீண்ட காலத்தின்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கிய போராட்டங்களனைத்தும் கொரில்லா யுத்தமுறையிலேயே அமைந்தன. அந்தக் காலத்தின் பிற்பகுதியில், செஞ்சேனையின் பலம் அதிகரித்ததன் காரணமாகக் கொரில்லா யுத்தம், கொரில்லாத் தன்மையுடைய நடமாட்ட யுத்தமாக மாறியது (இந்நடமாட்ட யுத்தம், தோழர் மாசேதுங் அவர்களால் வகுத்துக் கூறப்பட்டது போல, உயர்ந்த தரத்திலமைந்த கொரில்லா யுத்தமாகும்). ஆனால், ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தில், எதிரி நிலைமைகளின் மாற்றங்காரணமாக, கொரில்லாத் தன்மையுடைய நடமாட்ட யுத்தம் திரும்பவும் கொரில்லா யுத்தமாக மாறியது. ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் ஆரம்ப நாட்களில், வலதுசாரிச் சந்தர்ப்பவாதத் தவறிழைத்த கட்சித் தோழர்கள் கட்சி தலைமை தாங்கிய கொரில்லா யுத்தத்தைப் புறக்கணித்து, கோமிந்தாங் படையின் யுத்த நடவடிக்கைகளில் தமது நம்பிக்கையை வைத்துக்கொண்டனர். தோழர் மாசேதுங் அவர்கள் தமது "ஜப்பானிய - எதிர்ப்புக் கொரில்லா யுத்தத்தில் யுத்த தந்திரப் பிரச்சினைகள்", "நீண்ட கால யுத்தம் பற்றி", "யுத்தத்தையும் யுத்த தந்திரத்தையும் பற்றிய பிரச்சினைகள்" ஆகிய கட்டுரைகளில் அவர்களது கருத்துக்களை மறுத்துரைத்ததோடு, இக்கட்டுரையிற் சீனப் புரட்சியின் கொரில்லா யுத்த வடிவிலமைந்த நீண்டகால ஆயுதப் போராட்டத்தை நிகழ்த்தியதில் பெற்ற அனுபவத்தையும் தத்துவார்த்த முறையில் தொகுத்தளித்தார். ஜப்பானிய - எதிர்ப்பு யுத்தத்தின் இறுதிக்காலத்தில், குறிப்பாக முன்றாவது புரட்சிகர உள்நாட்டு யுத்த (1945-49) காலத்தில், புரட்சிகர சக்திகளின் வளர்ச்சிகளினதும் எதிரி நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்களினதும் காரணமாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் ஆயுதப் போராட்டத்தின் பிரதான வடிவம் கொரில்லா யுத்தத்திலிருந்து ஒழுங்கான யுத்தமாக மாறியது. மூன்றாவது புரட்சிகர உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், இது நன்கு அரண் செய்யப்பட்ட எதிரி நிலையங்களைத் தாக்கும் நடவடிக்கை உட்பட, கனரக ஆயுதந்தாங்கிய, பெரிய படைப்பிரிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் யுத்தமாக வளர்ந்தது.
4. லீ லி-சன்னின் "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாதம் பொதுவாக "லீ லி-சன் வழி" எனப்படுகிறது. அது, 1930 ஜூன்முதல் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கட்சியில் நிலைத்திருந்ததும் அப்போது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியில் பிரதான தலைமை உருப்பினராயிருந்த தோழர் லீ லி-சனைப் பிரதிநிதியாகக் கொண்டதுமான "இடதுசாரி"ச் சந்தர்ப்பவாத மார்க்கத்தைக் குறிக்கிறது. லீ லி-சன் வழி பின்வரும் இயல்புகளைக் கொண்டிருந்தது: அது கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டுக் கொள்கையை மீறி நடந்தது. புரட்சிக்கு மக்கள் பலத்தைக் கட்டிவளர்க்க வேண்டுமென்பதையும் புரட்சியின் வளர்ச்சி சமமட்டமானதல்ல என்பதையும் ஏற்கவில்லை; தோழர் மாசேதுங் அவர்களின், பிரதானமாகக் கிராமியத் தளப்பிரதேசங்களை உருவாக்குவதில் நாம் நீண்டகாலம் எமது கவனத்தைச் செலுத்தவேண்டும்; நகரங்களைச் சுற்றிவளைப்பதற்குக் கிராமியத் தளப்பிரதேசங்களை உபயோகிக்கவேண்டும் என்ற கருத்துக்களை "மிகவும் தவறானது" "விவசாயி மனப்போக்கின் சிறுபகுதிக்குரிய இயல்பும் பழைமை போற்றும் பண்பும்" என்று கருதியது. நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் உடனடியான கிளர்ச்சிக்கான ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டுமென்றும் கருதியது. இந்தத் தவறான வழியின் அடிப்படையில், தோழர் லீ லி-சன் நாடுமுழுவதுமுள்ள முக்கிய நகரங்களில் உடனடியான ஆயுதக்கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதற்குத் துணிச்சல்வாதத் திட்டமொன்றைத் தீட்டினார். அதே சமயத்தில், லீ லி-சன் வழி உலகப் புரட்சியின் வளர்ச்சி சமமட்டமானதல்ல எனபதை ஏற்க மறுத்து, சீனப் புரட்சியின் பொதுவெடிப்பு தவிக்க முடியாதபடி ஒரு உலகப் புரட்சியின் பொதுவெடிப்புக்கு வழிகோலும் எனவும் உலகப் புரட்சியின் பொதுவெடிப்பிலேதான் சீனப் புரட்சி வெற்றி பெறமுடியுமெனவும் கருதியது; அத்துடன், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்களில் ஏற்படும் வெற்றியின் ஆரம்பங்களே சோஷலிசப் புரட்சிக்கு மாறுவதற்கான ஆரம்பத்தைக் குறிக்கின்றன எனக் கருதி, சீனாவின் முதலாளித்துவ - ஜனநாயகப் புரட்சியின் நீடித்த தன்மையையும் ஏற்றுக்கொள்ள மறுத்து, இதன் காரணமாக, காலத்திற்கேற்காத பல "இடது சாரி"த் துணிச்சல்வாதக் கொள்கைகளை வகுத்தது. தோழர் மாசேதுங் அவர்கள் இந்தத் தவறான மார்க்கத்தை எதிர்த்தார்; முழுக் கட்சியினதும் மிகப் பரந்துபட்ட ஊழியர்களும் அங்கத்தவர்களுங்கூட அதைத் திருத்த வேண்டுமெனக் கோரினர். 1930 செப்டம்பரில் நடந்த கட்சி ஆறாவது மத்திய கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டத்திலே சுட்டிக்காட்டப்பட்ட தவறுகளைத் தோழர் லீ லி- சன் ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், மத்திய கமிட்டியிலிருந்து தன் தலைமைப் பதவியைக் கைவிட்டார். தோழர் லீ லி-சன் நீண்டகால நேரத்திலே தன் தவறான கருத்துக்களைத் திருத்தனார், ஆகவே அவர் கட்சியின் ஏழாவது தேசிய காங்கிரசின் போது மத்திய கமிட்டி அங்கத்தவராகத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5. 1930 செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற கட்சியின் ஆறாவது மத்தியக் கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டமும் அதற்குப் பிந்தைய மத்திய தலைமையும் லீ லி-சன் மார்க்கத்துக்குப் முற்றுப்புள்ளி வைக்க பல ஊக்கமான நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால் கட்சியின் ஆறாவது மத்தியக் கமிட்டியின் மூன்றாவது பிளீனக் கூட்டத்தின் பின்னர், சென்ஷாஓ-யு (வாங் மிங்), சின் பங்-சியென் (பொ கு) ஆகியோர் தலைமையிலான, நடைமுறைப் புரட்சிப் போராட்டத்தில் அனுபவமற்ற ஒரு கட்சித் தோழர்கள் மத்திய தலைமை எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராக நின்றனர். அவர்கள் “இரண்டு மார்க்கங்கள்” அல்லது “சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை மேலும் போல்ஷிவிமயமாக்குவதற்கான போராட்டம்” என்ற துண்டுப் பிரசுரத்தில் அப்பொழுது கட்சியில் நிலவிய பிரதான ஆபத்து “இடசாரி” சந்தர்ப்பவாதமல்ல “வலதுசாரி” சந்தரப்பவாதமாகும் என்று சிறப்பாக வலியுறுத்திக் கூறியதுடன் தமது சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்த லீ லி-சன் மார்க்கத்தை “வலதுசாரி” வழி என “விமர்சி”த்தார்கள். லீ லி-சன் மார்க்கத்தையும் இதர “இடதுசாரி”க் கருத்துகளையும் கொள்கைகளையும் புதிய போர்வையில் நீடித்து, புத்தியிர் அளித்து அல்லது விருத்தி செய்த புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை அவர்கள் முன்வைத்து, தோழர் மா-சே-துங் அவர்களின் சரியான வழிக்கு எதிராக தம்மை நிறுத்தினார்கள். இந்த தவறான புதிய “இடதுசாரி” வழி 1931 ஜனவரியில் நடைபெற்ற ஆறாவது மத்தியக் கமிட்டியின் நாலாவது பிளீனக் கூட்டம் முதல் இந்தத் தவறான மார்க்கத்தின் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்து தோழர் மா-சே-துங் அவர்களைத் தலைமையாகக் கொண்ட புதிய மத்திய தலைமையை நிறுவி, 1935 ஜனவரியில் குவெய்சௌ மாகாண சுன்யியில் மத்தியக் கமிட்டியால் கூட்டப்பட்ட அரசியல் குழுக்கூட்டம் வரை கட்சியில் மேலோங்கியிருந்தது. இத்தவறான “இடதுசாரி” வழி கட்சியில் குறிப்பிடத்தக்க அளவு நீண்டகாலம் (நான்கு ஆண்டுகள்) மேலோங்கியிருந்து கட்சிக்கும் புரட்சிக்கும் மிகவும் பெரிய சேதங்களை ஏற்படுத்தியது. அந்த நாசகரமான விளைவுகள் என்னவென்றால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனச் செஞ்சேனை, அதன் தளப்பிரதேசங்களிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் கோமிந்தாங்கின் கொடிய அடக்குமுறையை அனுபவிக்க நேர்ந்தது; சீனப் புரட்சியின் முன்னேற்றம் தாமதப்படுத்தப்பட்டது. தவறிழைத்த தோழர்களில் மிகப் பெரும்பான்மையினர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் நீண்ட போக்கின் மூலம் தமது தவறுகளைப் புரிந்துக்கொண்டு திருத்தி, கட்சிக்கும் மக்களுக்குமாக அநேக நல்ல வேலை செய்துள்ளார்கள். தோழர் மா-சே-துங் அவர்களின் தலைமையில் பொது அரசியல் விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் இப்பொழுது கட்சியிலுள்ள இதர பரந்துபட்ட தோழர்களுடன் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.
6. சாங் கோ-தௌ சீனப் புரட்சியின் ஒரு துரோகியாவான். அவன் புரட்சியில் லாபம் பெற எண்ணித் தன் வாலிபத்திலேயே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து கொண்டான். கட்சியில் அவன் பல தவறுகளை இழைத்துப் பாராதூரமான குற்றங்கள் புரிந்தான். மிகவும் கேடுகெட்டது என்னவென்றால், 1935ல் அவன் செஞ்சேனை வடக்கு நோக்கிச் செல்லுவதை எதிர்த்து, செஞ்சேனை கஸூவன் சீகாங் எல்லையிலுள்ள சிறுபானமைத் தேசிய இனப் பிரதேசங்களுக்குப் பின்வாங்கவேண்டுமென்ற தோல்விவாத, விலகல்வாதக் கொள்கையொன்றை முன்வைத்து, கட்சிக்கும் மத்தியக் கமிட்டிக்கும் எதிராகத் துரோக நடவடிக்கைகளில் பகிரங்கமாக ஈடுபட்டு ஒற்றுமையைச் சீர்குலைத்து, செஞ்சேனையின் நான்காவது முன்னணிப்படைக்குப் பெரும் இழப்புகளைக் கொண்டுவந்ததாகும். தோழர் மா-சே-துங் அவர்களதும் மத்தியக் கமிட்டியினதும் பொறுமையான போதனையினால் செஞ்சேனையின் நான்காவது முன்னணிப்படையும் அதன் பரந்துபட்ட ஊழியர்களும் விரைவாகத் திரும்பவும் கட்சி மத்தியக் கமிட்டியின் சரியான தலைமையின் கீழ் வந்து, தொடர்ந்து நடந்த போராட்டங்களில் ஒரு புகழ்மிக்க பாத்திரம் வகித்தனர். எப்படியாயினும் காங்-கோ-தௌ தான் திருத்தப்பட முடியாதவன் என நிரூபித்து, 1938 வசந்த காலத்தில் சென்சி-கன்சு-நிங்சியா எல்லை பிரதேசத்திலிருந்து தானாகவே தப்பி கோமிங்டானின் ரகசியப் போலீசில் சேர்ந்தான்.
No comments:
Post a Comment